ஈரோட்டில் பரபரப்புரிக் லாரியின் டீசல் டேங்கை அகற்றிய போது தீ விபத்து
ரிக் லாரியின் டீசல் டேங்கை அகற்றிய போது தீ விபத்து ஏற்பட்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோட்டில் ரிக் லாரியின் டீசல் டேங்கை அகற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாரியில் தீ விபத்து
ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் செல்லும் ரோட்டில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான, பழைய லாரிகளில் இருந்து உதிரிபாகங்கள் எடுக்கும் பட்டறை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டறையில் நேற்று காலை போர்வேலுக்கு பயன்படுத்தப்படும் பழைய ரிக் லாரியின் உதிரி பாகங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, காலியான டீசல் டேங்கை வெல்டிங் வைத்து அகற்றும்போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பட்டறை ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மேலும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அருகில் இருந்த வெல்டிங் கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.
பரபரப்பு
பின்னர் இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் பட்டறை ஊழியர்களே தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், தீ முழுமையாக அணைக்கப்பட்டதை உறுதி செய்து, இதுபோல தீ விபத்து ஏற்பட்டால் தீ தடுப்பானை கொண்டு தீயை அணைக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.