ஈரோட்டில் பரபரப்புசிம்கார்டு விற்பனை முகவர், செல்போன் கடை உரிமையாளர்கள் மோதல்
ஈரோட்டில் சிம்கார்டு விற்பனை முகவர், செல்போன் கடை உரிமையாளர்கள் மோதிக்கொணடனா்
ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டு விற்பனை முகவர் ராஜா (வயது 35) மற்றும் 2 பேர் சாலையோரம் குடை அமைத்து நேற்று சிம்கார்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையறிந்த ஈரோடு மாவட்ட செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் சங்க மாவட்ட தலைவர் ராஜாமுகமது தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர், சூரம்பட்டி வலசு பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் ராஜாவிடம், நீங்கள் இப்படி சாலையோரம் குடை அமைத்து சிம்கார்டு விற்பனை செய்தால், கடை வைத்து சிம்கார்டு விற்பனை செய்யும் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும், இனி இப்படி குடை அமைத்து விற்பனை செய்யக்கூடாது என்று கூறி உள்ளனர்.
இதில், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் ராஜா முகமது தாக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த ராஜாமுகமதுவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், செயலாளர் ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த ராஜாமுகமதுவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு பேரமைப்பின் சார்பில் தங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.