ஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்


ஆட்டங்காட்டும் ஆன்லைன் சூதாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டங்காட்டும் ‘ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பாக வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் 'ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் 'ஆன்லைன்' விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.

'ஆன்லைன்' விளையாட்டுகளில் திறமைக்கு சவால்விடும் வகையில், பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், அதில் 'ரம்மி' போன்ற சூதாட்டம் புகுந்து, விளையாடுகிறவர்களின் மனங்களை மசியம் செய்து மயக்குவதுடன், பண ஆசைகாட்டி இழுக்கிறது.

இந்த விளையாட்டுகளில் பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுத்தாலும், 'எப்படியும் ஒருமுறை வெற்றி பெற்றுவிடலாம். இழந்த பணத்தை மீட்டுவிடலாம்' என்ற நம்பிக்கை வெறியோடு பலர் பணத்தை இழந்து வருகிறார்கள்.சேமித்த பணத்தை இழந்து கடனாளியானவர்கள் தற்கொலை முடிவை தேடுகிறார்கள்.

தடையைத் தகர்த்தனர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த விளையாட்டுகளை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி தடையை தகர்த்துவிட்டன.

கொரோனா காலகட்டத்தில் இந்த விளையாட்டுகள் கொடிக்கட்டிப் பறந்தன. வேலையிழப்பு அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பதிவிறக்கம் அசுர வேகத்தில் நடைபெற்றன.

அதே வேகத்தில் சூதாடிப் பணத்தை இழந்தவர்கள் நிம்மதியை இழந்து, மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் விளைவால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற குரல் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்தது.

நிரந்தர தடை சட்டம் எப்போது?

அந்த குரலுக்கு செவி சாய்த்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்த குழு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை அவசியம் என்று அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது. அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றி தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.

அந்த அவசரச் சட்டத்தை நிரந்தரம் ஆக்குவதற்கான சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க முடியும்.

ஆனால் இந்த மசோதாவுக்கு இன்னமும் கவர்னரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

கவர்னர் விரைவில் முடிவு

கவர்னர் தரப்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 3 கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழக சட்டத்துறையும் உடனடியாக அந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்து இருக்கிறது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கங்களை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்துவிட்டு கவர்னர் விரைவில் ஒரு முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றி சட்ட வல்லுனர்களும், சமூக ஆர்வலர்களும், ஆன்லைன் சூதட்ட பாதிப்புகள் குறித்து உணர்ந்தவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வக்கீல் கருத்து

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன்:-

ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தமட்டில் வயது வரம்பில்லாமல் ஆண், பெண், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விளையாடி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்களது பெற்றோரின் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்த விளையாட்டில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இது லாட்டரி சீட்டுகளைவிட பல மடங்கு கொடுமையானது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தில் முடிவெடுப்பதில் கவர்னர் எந்தவித தாமதமும் செய்யக்கூடாது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கவர்னர் தாமதம் செய்ததால் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் என்பது பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய விவகாரம் என்பதால் கவர்னர் விரைந்து முடிவு எடுப்பது தான் மக்களுக்கு செய்யும் நன்மை ஆகும்.

எந்தவித பயனும் இல்லை

கள்ளக்குறிச்சியை சேர்ந்த வக்கீல் பிரபுதாஸ்:-

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொழிலதிபர்கள் முதல் கூலி தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், குடும்ப பெண்கள் வரை அனைவரும் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். பலர் தற்கொலையும் செய்துள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் அரசுக்கோ அல்லது மக்களுக்கோ எந்தவித பயனும் இல்லை. மக்களின் பல உயிர்களை பலியாக்கி பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும். நாட்டு மக்களின் நலன்கருதி ஆன்லைன் தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்த தடை சட்டம் கண்டிப்பாக சாத்தியமாகும்.

சாத்தியபடுத்த வேண்டும்

தென்கீரனூரை சேர்ந்த பன்னீர்செல்வம்:-

ஆன்லைன் சூதாட்டத்தால் பலபேர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இந்த சூதாட்டத்தில் சிக்கி அதில் இருந்து விடுபட முடியாமல் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆன்லைன் சூதாட்டத்தை விரைந்து தடை விதிக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்டிப்பாக சாத்தியபடுத்த வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி இருப்பவர்கள், அரசாங்கம் தடை போட்டாலும், விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதையும் காண முடிகிறது.



Next Story