பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி கைது


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகி கைது
x

பழனியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜிநகரை சேர்ந்தவர் முகமது கைசர் (வயது 50). இவர், பழனியில் காந்திரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்தார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மதுரை மண்டல தலைவராக இருந்த பழனியை சேர்ந்த முகமது கைசரிடமும் பழனியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் மற்றும் போலீசார் 10 பேர் பழனியில் உள்ள முகமது கைசர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். காலை 8.30 மணி வரை சோதனை நடந்தது. பின்பு முகமது கைசரை கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர்.

பழனியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மண்டல நிர்வாகி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி, அவரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story