பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி மற்றும் பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது.
கண்காட்சியை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து வேளாண்மை அறிவியல் நிலையத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் உதவியுடன் நடைபெற்று வரும் 3 நாள் அங்கக வேளாண்மை பயிற்சியில் பங்கேற்றுள்ள விவசாயிகள் பல்வேறு அங்கக இடுபொருட்கள் தயாரிப்பதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
அசோலா தயாரிப்பு
மேலும் அவர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா தயாரிப்பு, பரண் மேல் ஆடு வளர்ப்பு மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் போன்ற பல்வேறு மாதிரி திடல்களையும் பார்வையிட்டார். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் இயங்கிவரும் ஒருங்கிணைந்த வேளாண்மையில் மீன் வளர்ப்பு திட்டத்தையும் பார்வையிட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு மீன் குஞ்சுகளை இலவசமாக வழங்கினார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாளர் விஸ்வந்த் கண்ணா, காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர் சரவணா, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி ஊராட்சி வையகளத்தூர் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் பிரதம மந்திரியின் கிராமங்களை நகரத்தோடு இணைக்கும் திட்டத்தில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மூலமாக இந்த கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.