திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கைத்தறி சேலைகள் விற்பனை கண்காட்சி


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கைத்தறி சேலைகள் விற்பனை கண்காட்சி
x

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கைத்தறி துறை சார்பில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பொருட்களின் விற்பனையை அதிகரித்து விவசாயிகள், வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 'ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி அந்தந்த மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பொருட்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகளுக்கான விற்பனை கண்காட்சி, கைத்தறி துறை சார்பில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இன்று தொடங்கியது. இதற்கு ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார். கோட்ட வர்த்தக ஆய்வாளர் வீரபெருமாள், கைத்தறித்துறை துணிநூல் கட்டுப்பாட்டு அதிகாரி கவிதா உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இநத கண்காட்சியில் கைத்தறி தொழிலாளர்கள் மூலம் உருவாக்கப்பட்ட போரா காட்டன், மென்பட்டு, காட்டன் உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் பல வண்ணங்கள், வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. அதனை ரெயில் நிலைய அதிகாரிகள், பயணிகள் பார்வையிட்டனர். சிலர் தங்களுக்கு பிடித்த கைத்தறி சேலைகளை வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்து ரெயில் நிலைய மேலாளர் கூறுகையில், மத்திய அரசு உத்தரவுப்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 15 நாட்கள் இந்த கண்காட்சி-விற்பனை நடைபெறும். அதன் பின்னர் பயணிகள் ஆதரவை பொறுத்து சேலைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். கண்காட்சியில் ரூ.500 முதல் ரூ.8 ஆயிரத்து 500 மதிப்பிலான கைத்தறி சேலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அரசு அனுமதித்தபடி 20 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே திண்டுக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் கைத்தறி சேலைகளை வாங்கி கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றார்.



Next Story