சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி
ஆயக்குடியில் சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடந்தது.
பழனி அருகே ஆயக்குடியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பாரம்பரிய சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், வேளாண்மை துறை முதன்மை விஞ்ஞானி பரிமளம் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில், கம்பு, சோளம், ராகி, கோதுமை, பச்சைப்பயறு, மொச்சை, சுண்டல், தட்டைப்பயறு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி உணவுப்பொருட்களை தயார் செய்து காட்சிப்படுத்தப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு பாரம்பரிய உணவுகளை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவை தயார் செய்து காட்சிப்படுத்திய பெண்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.