தொல்பொருள் கண்காட்சி
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் தொல்பொருள் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாய்ராம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் அபிமன்னன் முன்னிலை வகித்தார். 9-ம் வகுப்பு மாணவி அட்சயா வரவேற்று பேசினார்.
தொன்மை பாதுகாப்பு மன்ற செயலாளர் சாந்தி பழமையை பாதுகாப்பதில் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார். ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளரும், தொல்லியல் ஆய்வாளருமான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார்.
அகழாய்வு
அப்போது அவர் கூறியதாவது:- கற்கால நாகரிகத்தின் தொடக்கமும், இரும்பு கண்டுபிடிப்பும் தமிழகத்தில்தான் முதன்முதலில் நடந்து உள்ளது. இத்தகைய வரலாற்றுக்கு முற்பட்ட நாகரிக காலத்தை அகழாய்வுகள் மூலம் நாம் அறியமுடிகிறது.
முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரிய வாழ்க்கை முறையில் இருந்து நாம் மாறி வருவதால் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை பண்பாட்டை அறிந்து கொள்ள தொன்மை பாதுகாப்பு மன்றம் உதவுகிறது என்றார். முடிவில், பட்டதாரி ஆசிரியர் ஜோஸ்பின் செல்வி நன்றி கூறினார்.
ஏற்பாடு
பின்பு நடந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்கால, பெருங்கற்கால தொல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதனை மாணவ-மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 9-ம் வகுப்பு மாணவர்கள் தருண், உதயமூர்த்தி, நேசிகாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.