பாரம்பரிய மருத்துவத்தை மதிப்பீடு செய்வது குறித்து விளக்கம்
பழங்குடியின மக்களின் பாரம்பரிய மருத்துவத்தை மதிப்பீடு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய மருத்துவத்தை மதிப்பீடு செய்வது குறித்த பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள பல்துறை சுகாதார விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மூலம் நடைபெற்றது. உதவி பேராசிரியர் பிரகாஷ், தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சங்க தலைவர் சுமானந்தன், பழங்குடியின மக்களின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்ட மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தபோது கூறியதாவது:-
மூத்த பழங்குடியின மக்கள் இடையே பாரம்பரிய மருத்துவ அறிவு குறைந்து வருகிறது. இதனை ஆவணப்படுத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் சுகாதார சேவை மேம்படுவதுடன், மூலிகைகளை பாதுகாக்க முடியும். தற்போதைய உலகில் நமது பாரம்பரிய மருத்துவம் தனித்தன்மை வாய்ந்தது. இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம், பழங்குடியினரின் சுகாதார பாதுகாப்பு நடைமுறை ஆவணங்களின் முக்கியத்துவம், சமூக சுகாதார நடவடிக்கை மற்றும் சுகாதார பிரச்சினைகள், பாரம்பரிய மருத்துவரின் அறிவை ஆவணப்படுத்துவது மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகிய தலைப்புகளில் விளக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.