பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பேர் பலி


சிவகாசி அருகே மற்றொரு பட்டாசு ஆலையிலும் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர்

தாயில்பட்டி,

பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியானார்கள். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

பட்டாசுகள் வெடித்தன

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையை சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார்.

இந்த ஆலையில் மொத்தம் 41 அறைகள் உள்ளன. இதில் நேற்று 38 பேர் பணியாற்றி கொண்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் ஒரு அறையில் ராக்கெட் வெடி மற்றும் சிறிய பிளாஸ்டிக் பந்து போன்ற டப்பாக்களில் பட்டாசுளுக்கான மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் திடீரென பயங்கரமாக வெடித்து சிதறியது.

2 பேர் பலி

அப்போது வெடி விபத்து ஏற்பட்டு, தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதால் அதில் இருந்த பட்டாசு அறைகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. தீ விபத்து நடந்ததும் மற்ற அறைகளில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

பட்டாசு சத்தம் தொடர்ந்து கேட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசு ஆலை முன்பு குவியத்தொடங்கினர்.

இந்த விபத்தில் சாத்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்த குமார் மகள் முனீஸ்வரி (வயது 30) மற்றும் ஒரு ஆண் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

16 பேர் படுகாயம்

அமீர்பாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த ராஜ்குமார், மேலகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த மாரிமுத்து, மகேஸ்வரன், சுண்டன்குளத்தை சேர்ந்த முனீஸ்வரி, பாண்டியன், ஆலங்குளத்தை சேர்ந்த ஜோதி, அன்பின் நகரத்தை சேர்ந்த தங்கராஜ், ஜெயராஜ், படந்தாலை சேர்ந்த மாரியப்பன், மேட்டுப்பட்டியை சேர்ந்த குருசாமி, புதுபாளையத்தை சேர்ந்த செல்லத்தாய், முருகன் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் மீட்கப்பட்டு சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். வெடி விபத்து நடந்த இடத்தை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் கொடுத்த புகாரின்பேரின் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story