சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனையால் பரபரப்பு-போலீசார் விசாரணை
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருவாரமாக கேட்பாரற்று நின்ற காரில் வெடிகுண்டு சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கேட்பாரற்று நின்ற கார்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் உள்ளன. இதனால் துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள சைக்கிள் நிறுத்தம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரு கார் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பதிவெண் கொண்ட அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. இதனால் அந்த காரில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ? என்று தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த அரசு அலுவலர்கள் நேற்று சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு சோதனை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கார் குறித்து விசாரித்தனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு காரில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று சோதனை செய்யப்பட்டது.
அப்போது அந்த காரில் வெடிகுண்டு உள்ளிட்ட சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் இல்லாததால் பதிவெண் கொண்டு காரின் உரிமையாளர் யார் என்றும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் அந்த கார் எப்போது வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த நேரு என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், இவர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை அழைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் பழுது ஏற்பட்டதால் அதனை இயக்க முடியாத சூழல் இருந்ததாகவும், அதனால் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அந்த காரை எடுத்து செல்லுமாறு போலீசார் அவருக்கு அறிவுறுத்தினர்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.