பஸ், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி காரணமாக பஸ், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினா்.
விழுப்புரம்:
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த மாதம் 23-ந் தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்கிற என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார். இதன் எதிரொலியால் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் ஏராளமான போலீசார் தீவிரமாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளிமாநிலங்களுக்கும் மற்றும் பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
அதுபோல் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.