தேவாலா, நாடுகாணி வனப்பகுதியில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? -வனத்துறையினர் சோதனை
நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கூடலூர்
நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு
கூடலூர் தாலுகா நாடுகாணி, தேவாலா வனப்பகுதியில் ஆங்கிலேயர் கால தங்க சுரங்கம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாததால் தங்கத் துகள்களை வெட்டி எடுப்பதற்காக அதே பகுதிகளை சேர்ந்த சிலர் கள்ளத்தனமாக வனத்துக்குள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதி வறட்சியாக மாறி உள்ளது.
இதனால் வனத்துக்கு சமூகவிரோதிகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொன்னூர், பொன்வயல் பகுதியில் கடந்த 2- தினங்களுக்கு முன்பு பயங்கர காட்டு தீ பரவியது. மேலும் காற்றின் வேகம் அதிகரித்து இருந்ததால் தீயை உடனடியாக அணைக்க முடிய வில்லை. இதில் பல ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் மற்றும் மரங்கள் எரிந்து நாசமானது. இந்த சமயத்தில் வனப்பகுதியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.
வனத்துறையினர் சோதனை
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வனத்துக்குள் அத்துமீறி நுழைந்து டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகளை கொண்டு பாறைகளை உடைத்து தங்கத் துகள்களை சேகரிக்க வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த போது காட்டுத்தீ பரவி வெடித்தது தெரிய வந்தது.
இதுபோல் பல இடங்களிலும் தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருக்கிறார்களா? என போலீசார், வனத்துறையினர் சந்தேகித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறையினர் நாடுகாணி, தேவாலா வனத்தில் புதர்கள் மற்றும் பள்ளங்களுக்குள் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகப்படும்படி நபர்களின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் தங்கத்துகள் சேகரிப்பதற்காக சுமார் 1500-க்கும் மேற்பட்ட குழிகள் சமூக விரோதிகளால் தோண்டப்பட்டுள்ளது. இதை மூடுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.