கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் ஏற்றுமதி தீவிரம்
அதிராம்பட்டினம் பகுதியில் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் பகுதியில் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலர வைக்கும் பணி
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக சங்காயம் ஏற்றுமதி தீவிரமடைந்துள்ளது. சங்காயம் என்பது கறிக்கு உதவாத நண்டு, மீன்களை வெயிலில் உலரவைத்து எடுக்கப்படும் பொடிக் கருவாடு ஆகும்.இது கோழித்தீவனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த சங்காயம் நாமக்கல் மற்றும் தூத்துக்குடி பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பல இடங்களில் மழை பெய்து வந்தாலும், அதிராம்பட்டினம் பகுதியில் மட்டும் வெயில் சுட்டெரித்து வருவதால் சங்காயத்தை உலரவைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உலரவைக்கப்பட்ட சங்காயம் ஏற்றுமதி செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி தீவிரம்
இதுகுறித்து கங்காயம் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடலுக்கு செல்லும் மீனவர்களின் வலையில் சிக்கும் கறிக்கு உதவாத சிறிய வகை நண்டுகள், மீன்களை வலையில் இருந்து அகற்றும் போது அவற்றை துறைமுக ஓரத்தில் கொட்டி வைத்து விடுவோம்.
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் கடற்கரையில் கொட்டி வைத்த மீன்களை நன்கு காயவைத்து மூட்டைகளாக கட்டி வைப்போம். இந்த சங்காயத்தை கோழித்தீவனத்திற்காக நாமக்கல் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
தற்போது சங்காயம் ஏற்றுமதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சங்காயம் ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றார்.