'அஸ்வகந்தா மூலிகை செடிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி'
‘அஸ்வகந்தா மூலிகை செடிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது’ என்று வேடசந்தூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மூலிகை சாகுபடி கருத்தரங்கம்
தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியத்தின் சார்பில், வேடசந்தூரில் உள்ள மத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தின் மூலிகை பண்ணையில் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அஸ்வகந்தா மூலிகை நாற்றுக்களை அவர் நட்டார். கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
அஸ்வகந்தா மூலிகை செடியை பயிரிட ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும். அதேநேரத்தில் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
இந்திய அளவில் குஜராத், ஆந்திரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் அஸ்வகந்தா பயிரிடப்பட்டு வருகிறது. மருந்துகள் தயாரிப்பதற்கு நமக்கு தேவையான அஸ்வகந்தா மூலிகை செடிகளை அங்கிருந்து வாங்கி வருகிறோம்.
தற்போது அதை நாம் பயிரிட்டு அனைத்து பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். அதற்காகவே இந்த ஒரு நாள் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடலூர், பன்றிமலை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள் வாங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் கட்டிட வசதி
இந்த கருத்தரங்கில் காந்திராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிட வசதி செய்து தர வேண்டும். குஜிலியம்பாறை துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கருத்தரங்கில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் பொன்மணிவேல், மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், நகர செயலாளர்கள் கார்த்திகேயன் (வேடசந்தூர்), கணேசன்(வடமதுரை), கருப்பன்(அய்யலூர்), வேடசந்தூர் ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரியம் நடராஜன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், துணைத்தலைவர் ஷாகுல்ஹமீது, செயல் அலுவலர் முகமதுயூசுப் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.