பொங்கல் விற்பனைக்காக வெளியூர்களுக்கு தேங்காய் ஏற்றுமதி
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொங்கல் விற்பனைக்காக தேங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தேங்காய் உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், வேம்பங்குடி, பைங்கால் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் அருகில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்றியுள்ள கிராமங்களிலும் பிரதானமாக தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. கஜா புயலில் கோடிக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து தென்னை விவசாயிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.
அந்த இழப்பிலிருந்து இன்னும் விவசாயிகள் மீளமுடியாமல் உள்ளனர். புயலில் சாயாமல் எஞ்சியிருந்த தென்னை மரங்களில் இருந்து தேங்காய்கள் உற்பத்தி செய்வதுடன் புதிய தென்னங்கன்றுகளும் நடவு செய்துள்ளனர். ஆனால் தேங்காய்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.
பொங்கல் விற்பனை
கீரமங்கலம், பேராவூரணி சுற்றியுள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் தேங்காய்களை உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கொப்பரைக்காக வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகைக்கான நாட்கள் நெருங்குவதால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்த தேங்காய்களை பொங்கல் விற்பனைக்காக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். தொடர்ந்து வெளியூர்களுக்கு தேங்காய்கள் ஏற்றுமதி இருந்தாலும் விலை ஏற்றம் இல்லை என்று விவசாயிகள் கூறினர்.