தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில்
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே பொதுமேலாளர், ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் இடையே மதுரை வழியாக வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க தென்னக ரெயில்வே பொதுமேலாளர், ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்தார்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட எம்.பி.க்களுக்கான ரெயில்வே ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதுரை எம்.பி. வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் கலந்து கொண்ட இந்த கூட்டத்துக்கான ஆலோசனைகளை ஒரு மாதத்துக்கு முன்னதாக வழங்கியிருந்தோம். அதில், கோவையில் சுமார் 14 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரசாக மேட்டுப்பாளையம்-மதுரை இடையே இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், பராமரிப்பு பணிக்கு போதிய கால அவகாசம் இல்லாததால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்க வாய்ப்பில்லை. அதற்கு பதிலாக, தென்னக ரெயில்வே சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 3 முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வருகிற கூட்டத்தொடரில் இந்த கோரிக்கை குறித்து ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். விருதுநகர்-திண்டுக்கல் இடையே சென்னையில் இருப்பது போல, தொடர் பாசஞ்சர் ரெயில்சேவை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் என்ஜின் டிரைவர்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. சுமார் 16 மணி நேரம் பணியாற்றும் சூழலில் பெண் என்ஜின் டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மகப்பேறு காலங்களில் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே என்ஜினில் கழிப்பறை வசதி செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீசன் டிக்கெட்
தற்போது தயாரிக்கப்படும் மின்சார ரெயில் என்ஜின்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. கூடல்நகர் ரெயில் நிலையத்தை 2-வது முனையமாக மாற்ற வேண்டும் என்று தொழில்நுட்ப விவரங்களுடன் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதே கோரிக்கை ரெயில்வே அமைச்சரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில்களில் சீசன் டிக்கெட் பயணிகளுக்கான விதிமுறையில் 150 கி.மீ. தூரத்துக்குள் உள்ள இடங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மதுரை-நெல்லை, மதுரை-திருச்சி செல்லும் பயணிகள் சீசன் டிக்கெட் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மும்பை-பூனா இடையே 190 கி.மீ.தூரத்துக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படுவது போல, மதுரை-நெல்லை, திருச்சி ஆகிய இடங்களுக்கும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.