நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல மணிநேரம் தாமதம்
சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் நாகர்கோவிலுக்கு அனைத்து ரெயில்களும் பல மணிநேரம் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
நாகர்கோவில்:
சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் நாகர்கோவிலுக்கு அனைத்து ரெயில்களும் பல மணிநேரம் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சுரங்கப்பாதை பணி
நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் பின்புறம் ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வர வசதியாக ஊட்டுவாழ்மடம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே துறை சார்பில் ரூ.4.50 கோடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. தற்போது நிலத்தை தோண்டும் பணி நடக்கிறது.
சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் 4 ரெயில் தண்டவாளங்கள் உள்ளன. அந்த தண்டவாளங்களின் கீழ் கர்டர் என்று சொல்லப்படும் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே 3 ரெயில் தண்டவாளங்களின் கீழ் இந்த கர்டர் அமைக்கும் பணி முடிந்தது. இந்தநிலையில் 4-வது தண்டவாளத்தின் கீழ் கர்டர் அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு தொடங்கி நேற்று காலை 6.50 மணிக்கு நிறைவடைந்தது.
ரெயில்வே கேட் மூடல்
இதனால் நேற்று முன்தினம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இன்றும் (புதன்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்டர் அமைக்கும் பணியால், நேற்று காலையில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் டவுன் ரெயில் நிலையங்களுக்கு வரவேண்டிய ரெயில்கள் அனைத்தும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதாவது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர், திருநெல்வேலி ஆகிய ரெயில் நிலையங்களில் சில மணி நேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும், டவுன் ரெயில் நிலையத்துக்கும் நேற்று காலையில் சென்னை, பெங்களூரு, கோவை, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் அனைத்தும் குறைந்தது 2 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 5¼ மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் ரெயில்களில் வந்த பயணிகளும், அவர்களை வரவேற்க ரெயில் நிலையங்களுக்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
ரெயில்கள் விவரம்
கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் அதிகாலை 4.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். ஆனால் இந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 6.50 மணிக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்த முதல் ரெயில் இதுதான்.
சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 5 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். ஆனால் இந்த ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக அதாவது காலை.7.15 மணிக்கு வந்தது. அதன்பிறகு கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றது.
இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ரெயில், வழக்கமாக அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேரும். ஆனால் நேற்று இந்த ரெயில் 8.55 மணிக்கு அதாவது 5¼ மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் வந்து சேர்ந்தது. தாம்பரம்- நாகர்கோவில் ரெயில் வழக்கமாக காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேரும். ஆனால் நேற்று இந்த ரெயில் 9.50 மணிக்கு 2½ மணி நேரம் தாமதமாக வந்தது.
மணிக்கணக்கில் காத்திருந்தனர்
பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்து சேரும். ஆனால் இந்த ரெயில் 40 நிமிடம் தாமதமாக 8.10 மணிக்கு வந்து சேர்ந்தது. சென்னையில் இருந்து கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் காலை 8.10 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வந்து சேரும். ஆனால் நேற்று இந்த ரெயில் 9.15 மணிக்கு வந்து சேர்ந்தது. இதேபோல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் வரும் பயணிகள் ரெயில் ஒரு மணி நேரமும், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் 1¼ மணி நேரமும் தாமதமாக வந்தது. நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ்ரெயில் 1¼ மணி நேரமும், நாகர்ேகாவிலில் இருந்து கொல்லம் செல்லும் ரெயில் 1¼ மணி நேரமும் தாமதமாக புறப்பட்டு சென்றது. நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் எரநாடு மற்றும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரத்தோடு நிறுத்தப்பட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றன. மதுரை-புனலூர், புனலூர்-மதுரை ரெயில்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வராமல் பைபாஸ் வழியாக இயக்கப்பட்டு டவுன் ரெயில் நிலையத்தில் நின்று சென்றன. நெல்லையில் இருந்து வரும் ஹாபா ரெயில் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த காலதாமதம் காரணமாக ரெயில் பயணிகளும், வரவேற்க வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் மணிக்கணக்கில் ரெயில் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.