நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் அபகரிப்பு
பாதரச தொழிற்சாலை ஊழியருக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.40 லட்சம் அபகரித்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொடைக்கானலை சேர்ந்தவர் சேவியர். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கொடைக்கானலில் செயல்பட்ட பாதரச தொழிற்சாலையில் கடந்த 1983-ம் ஆண்டு ஊழியராக வேலைக்கு சேர்ந்தேன். பின்னர் அந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2001-ம் ஆண்டு பாதரச தொழிற்சாலை மூடப்பட்டது. அப்போது அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதில் எனக்கு ரூ.40 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி என்னைப்போல் மேலும் 113 பேருக்கும் இதே தொகை நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாதரச தொழிலாளர் நலச்சங்க நிர்வாகிகள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் எங்களுக்கு சேர வேண்டிய நிவாரண தொகையை அபகரித்துவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாதரச தொழிலாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளான மகேந்திரபாபு, ராஜா முகமது, ரகுநாதன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் நிவாரண தொகையை அபகரித்தது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரபாபு உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.