கிருஷ்ணகிரியில்4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடங்கள் நீட்டிப்புஅமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்


கிருஷ்ணகிரியில்4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடங்கள் நீட்டிப்புஅமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடங்களை நீட்டிப்பு செய்து அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி, காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பஸ் வழித்தடம் நீட்டிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சி.கொட்டூர் கிராமத்தில் இருந்து சிக்கபூவத்திக்கும், பேடரஅள்ளி, திருவனம்பட்டி, குன்னத்தூர் ரெயில் நிலையங்களுக்கும் 4 அரசு டவுன் பஸ்களின் வழித்தடங்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நீட்டிக்கப்பட்டுள்ளது. வழித்தட நீட்டிப்பு செய்து பஸ்களை இயக்கும் விழா, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு, புதிய வழித்தடத்தில் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கலெக்டர் சரயு, எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசியதாவது:-

பல்வேறு திட்டங்கள்

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கிருஷ்ணகிரி டவுன் பஸ் கிளைக்குட்பட்ட டவுன் பஸ் கிளை தடம் எண் கே 59 பஸ் தற்போது இயங்கும் வழித்தடம் கிருஷ்ணகிரி-மேல்நூக்கி (வழி) ஆலப்பட்டி, சிக்கப்பூவத்தி செல்லும் பஸ், மேல்நோக்கியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு செல்லும்போது சி.கெட்டூர் ஊருக்குள் சென்று பள்ளி மாணவர்களை சிக்கபூவத்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வரை காலை மற்றும் மாலை பள்ளி நேரத்திற்கு செல்லும் வகையில் வழி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தடம் எண் கே52 பஸ் தற்போது காவேரிப்பட்டணத்தில் இருந்து அவதானப்பட்டி கோவில் வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்று வந்த பஸ், தற்போது பேடரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் மாலை பள்ளி முடித்து வீடு திரும்ப ஏதுவாக வழி நீட்டிப்பு செய்யப்பட்டள்ளது. தர்மபுரி டவுன் பஸ் கிளைக்குட்பட்ட கிளை தடம் எண் 24 பஸ் தற்போது தர்மபுரியில் இருந்து செம்மனஅள்ளி, பெரமாண்டப்பட்டி வழியாக இ.அக்ரஹாரத்திற்கு சென்று வருகிறது. இந்த பஸ் தற்போது இ.அக்ரஹாரத்தில் இருந்து திருவனம்பட்டிக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயன்

மேலும் ஊத்தங்கரை கிளை தடம் எண் 14 பஸ் தற்போது ஊத்தங்கரையிலிருந்து சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி வழியாக நீப்பத்துறைக்கு சென்று வருகிறது. இந்த பஸ் தற்போது ஊத்தங்கரையில் இருந்து பொதுமக்கள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் குன்னத்தூர் ரெயில் நிலையத்திற்கு இரயில் நேரத்திற்கு செல்ல ஏதுவாக வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஓசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம், துணை மேலாளர்கள் ராஜராஜன், மோகன்குமார், கோட்ட மேலாளர் தமிழரசன், முன்னாள் எம்.பி. சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி தலைவர் பரிதா நவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, தி.மு.க. பிரமுகர் கே.வி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், கிளை மேலாளர்கள் கே.சி.இளங்கோவன், பி.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story