கம்பைநல்லூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து கடைக்காரரிடம் பணம் பறிப்பு-மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 3 பேர் கைது


கம்பைநல்லூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து கடைக்காரரிடம் பணம் பறிப்பு-மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 3 பேர் கைது
x

கம்பைநல்லூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போல் நடித்து பெட்டி கடைக்காரரிடம் பணம் பறித்த மருந்து விற்பனை பிரதிநிதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள கொங்கரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 50). இவர் இருமத்தூர் சந்திப்பு ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது கடைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் டிப்-டாப் ஆசாமிகள் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அடையாள அட்டையை காண்பித்து உள்ளனர். பின்னர் உங்களது கடையை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி அவர்கள் கடைக்குள் இருந்த பொருட்களை சோதனை செய்தனர்.

பின்னர் அந்த கடையில் காலாவதியான பொருட்கள் இருப்பதாக கூறி அதற்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கு பதிலாக எங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உங்களை விட்டு விடுகிறோம் என கூறியுள்ளனர்.

ரூ.10 ஆயிரம்

இதைத்தொடர்ந்து குமாரசாமி தன்னிடம் ரூ.10 ஆயிரம் இல்லை எனக்கூறி உள்ளார். அதற்கு 3 பேரும் தங்களது செல்போன் எண்ணுக்கு பணம் அனுப்பும் செயலி ஒன்றின் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்புமாறு கூறியுள்ளார்கள். உடனே குமாரசாமி ரூ.10 ஆயிரத்தை அதில் அனுப்பி உள்ளார்.

பின்னர் அவருக்கு டிப்-டாப் ஆசாமிகள் மீது சந்தேகம் வரவே உங்கள் மீது எனக்கு சந்தேகமாக உள்ளது. எனவே உங்கள் மீது நான் போலீசில் புகார் செய்வேன் எனக்கூறியுள்ளார். அதற்கு பயந்து போன 3 டிப்-டாப் ஆசாமிகளும் செல்போன் செயலி மூலம் தங்களுக்கு வந்த ரூ.10 ஆயிரத்தை மீண்டும் குமாரசாமிக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நைசாக தப்பி செல்ல முயன்று உள்ளனர்.

3 பேர் கைது

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் 3 பேரையும் பிடித்து கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று குமாரசாமி புகார் தெரிவித்தார். அதன்பேரில் கம்பைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், போலி உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்த 3 பேரும் கடத்தூர் அருகே உள்ள வேடியூரை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சுபாஷ் (26), கூலித் தொழிலாளி பாலசுப்ரமணி (23),பேக்கரி கடை ஊழியர் பிரவீன் (22) ஆகியோர் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலி உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து பெட்டி கடைக்காரரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைதான 3 பேரும் அரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story