கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை மஞ்சன மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் ஹேமநாதன் (வயது 20). இவர் ராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டு ராமநாதபுரம் குமரைய்யாகோவில் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போது ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்னேஸ்வரன் (25) என்பவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் போட்டுள்ளார். அதன்பின்னர் ஹேமநாதன் அருகில் வந்து அவரின் செல்போனை கேட்டு மிரட்டி உள்ளார். அவர் தர மறுத்தத்தால் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.6 ஆயிரத்து 520-ஐ பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஹேமநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.