நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
நூதன முறையில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வீரையன் மனைவி வசந்தா (வயது 62). வீரையன் இறந்து விட்டார். சம்பவத்தன்று வசந்தா தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் அண்ணாநகர் பஸ் நிறுத்தம் சென்று, அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் வசந்தாவிடம் நாங்கள் போலீஸ் என்று கூறி அறிமுகமாகியுள்ளனர். அப்போது வசந்தாவிடம், இந்த பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடப்பதால், தங்கச் சங்கிலியை கழற்றி பேப்பரில் மடித்து வைத்து தருகிறோம் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி வசந்தா கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் மோதிரத்தை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். நகைகளை வாங்கிக்கொண்ட மர்மநபர்கள் நகைக்கு பதிலாக பேப்பரில் கற்களை மறைத்து வைத்து கொடுத்துள்ளனர். இதனை அறியாத அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அதில் நகைகளுக்கு பதில் கற்கள் இருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் வசந்தா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை மூதாட்டியிடம் இருந்து பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.