தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி டாக்டரை மிரட்டி ரூ.2½ லட்சம் பறிப்பு


தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி டாக்டரை மிரட்டி ரூ.2½ லட்சம் பறிப்பு
x

தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி டாக்டரை மிரட்டி ரூ.2½ லட்சம் பறிப்பு

திருவாரூர்

முத்துப்பேட்டை அருேக உயிரோடு இருக்கும் பெண்ணை தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி டாக்டரை மிரட்டி ரூ.2½ லட்சம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் டாக்டர் புகார்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைத்தெரு செருபனையூர் சாலையில் ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் அப்துல் காதர்(வயது 58). இவரது மகன் இம்ரான்கான்(30). டாக்டரான இவரும் தந்தையின் ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் டாக்டர் அப்துல் காதர் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில், தங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி மிரட்டி என்னிடம் ரூ.2½ லட்சத்தை 2 பேர் பறித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தவறான சிகிச்சையால் இறந்ததாக...

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரோடு இருக்கும் பெண்ணை தவறான சிகிச்சையால் இறந்து விட்டதாக கூறி ரூ.2½ லட்சத்தை டாக்டரிடம் பறித்துச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

கடந்த 29-ந்தேதி முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரி என்பவர், அப்துல்காதர் நடத்தி வரும் ஆஸ்பத்திரியில் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூறி சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.

சும்மா விடமாட்டோம்...

மறுநாள்(30-ந்தேதி) டாக்டர் அப்துல் காதருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அவர், டாக்டர் அப்துல்காதரிடம், நேற்று உங்கள் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த பாலசுந்தரி என்ற பெண், நீங்கள் தவறாக செய்த சிகிச்சையால் இறந்து விட்டார்.

எனவே உங்களை சும்மா விடமாட்டோம். இது தொடர்பாக உங்களிடம் நேரடியாக பேச வேண்டும் என மிரட்டி உள்ளார். உடனே அப்துல்காதர், மறுமுனையில் பேசியவரிடம் நேரில் பேசலாம் வாருங்கள் என அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

இதையடுத்து செல்போனில் பேசியவர் தன்னுடன் ஒருவரை அழைத்துக்கொண்டு டாக்டர் அப்துல்காதரின் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரை மிரட்டி இந்த பிரச்சினை தொடர்பாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் தங்களது உறவினர்களை அழைத்து வந்து தகராறு செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர், அவர்களிடம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் இறுதி சடங்கு செய்து விட்டு வந்து மீதி தொகையை வாங்கிக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஆட்களை திரட்டி வருவதாக...

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி மீண்டும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து மேலும் ரூ.3 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் டாக்டர் ரூ.50 ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளார்.

உடனே அவர்கள் இருவரும் மீதி பணத்தை தராவிட்டால் கிராமத்திற்கு சென்று ஆட்களை திரட்டி வருவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

உயிரோடு இருக்கும் பெண்ணை...

இதனால் மன உளைச்சல் அடைந்த டாக்டர் அப்துல்காதர் தில்லைவிளாகத்தில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, பாலசுந்தரி சாகவில்லை என்பதும், உயிேராடு இருக்கும் பெண்ணை இறந்ததாக கூறி பணம் பறித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து டாக்டர் அப்துல் காதரும், அவரது உறவினர்களும் மிரட்டி பணம் வாங்கி சென்ற 2 பேரின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது ஏற்கனவே பணம் வாங்கி சென்ற இருவரும் வந்து மீதி பணத்தை தாருங்கள் என கேட்டுள்ளனர்.

2 பேர் கைது

உடனே அவர்கள் இருவரையும் டாக்டரும், அவரது உறவினர்களும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் வீரசேகரன்(34), சுரேஷ்ராஜன் மகன் முகேஷ்குமார்(26) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரசேகரன், முகேஷ்குமார் ஆகிய 2 இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய பாலசுந்தரியை போலீசார் தேடி வருகின்றனர்.

உயிரோடு இருக்கும் ெபண்ணை தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக கூறி டாக்டரிடம் ரூ.2½ லட்சம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story