விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறிப்பு: மேலும் ஒருவர் கைது
விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்தது தொடா்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டாா்.
சோலார்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓலாபுரத்தை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவரிடம் ஈரோட்டை சேர்ந்த ராஜ்குமார் தன்னிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகம் உள்ளது. ரூ.35 லட்சம் கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறினார். அவர் கூறியதை நம்பி சிவாஜி ஈரோடு லக்காபுரத்துக்கு பணத்துடன் காரில் வந்தார். அவருடன் உறவினர் செந்தில்குமார் என்பவரும் வந்திருந்தார். இந்தநிலையில் அங்கு சிலருடன் காரில் வந்த ராஜ்குமார் பணம் தருவதாக லக்காபுரத்துக்கு சிவாஜியையும், செந்தில்குமாரையும் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் ஒரு கார் அவர்களை மறித்தது. அதில் இருந்து இறங்கிய 4 பேர் தங்களை அரசு அதிகாரிகள் என்று கூறி சிவாஜியையும், செந்திலையும் பணத்துடன் காரில் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சிவாஜியையும், செந்திலையும் காரில் இருந்து இறக்கிவிட்டு பணத்துடன் மின்னலாய் சென்றுவிட்டனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை சிவாஜி தெரிந்து கொண்டார். உடனே இதுபற்றி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கரூர் மாவட்டம் மலைக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன், நாமக்கல் மாவட்டம் பொத்தனூரை சேர்ந்த மாதேஷ், கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த கண்ணன், கரூர் வெங்கமேட்டை சேர்ந்த சின்னதுரை ஆகிய 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (55) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை மொடக்குறிச்சி போலீசார் சாவடிப்பாளையம் ஆரியன்காடு பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சுந்தரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சுந்தரமூர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.