விவசாயியிடம் நூதனமுறையில் ரூ.60 ஆயிரம் பறிப்பு
சின்னசேலத்தில் பட்டப்பகலில் விவசாயியிடம் நூதனமுறையில் ரூ.60 ஆயிரம் பறிப்பு
சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த தகரை கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மணிவேல்(வயது 48). விவசாயியான இவர் சம்பவத்தன்று காலை சின்னசேலம் மெயின் ரோட்டில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கடன் ரூ.60 ஆயிரத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். மூங்கில்பாடி சாலை அரசமரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் மணிவேலை பார்த்து உங்கள் பணம் கீழே விழுந்து விட்டது எனக்கூறி கவனத்தை திசை திருப்பினர். உடனே அவர் கீழே கிடந்த 20 ரூபாய் நோட்டை பார்க்க முயன்றபோது மர்ம நபர்கள் அவரது வண்டியில் மாட்டியிருந்த பணம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து பணப்பையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.