வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் பணம் பறிப்பு
போன் செயலி மூலம் அறிமுகமாகி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீர்காழி:
போன் செயலி மூலம் அறிமுகமாகி வாலிபரிடம் ரூ.70 ஆயிரம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செயலி மூலம் அறிமுகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வைப்புச்சாவடி பகுதியில் வசிக்கும் பாலுவின் மகன் விக்னேஷ் (வயது26). இவரிடம் கடந்த மாதம் 8-ந் தேதி தூத்துக்குடி கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கருப்புசாமி என்கிற கார்த்திக்(25) பிச்சைக்கனி மகன் மணி என்கிற மணிராஜ் (26), சிதம்பரம் நற்கந்தன்குடி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (25) மேலும் ஒரு சிறுவன் ஆகிய நான்கு பேரும் ஒரு செயலியின் வாயிலாக அறிமுகமாகி அவரவர் தகவல்களை பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சீர்காழியில் ஏதேனும் தெரிந்த இடம் இருக்கிறதா? அங்கு சந்திக்கலாமா? என 4 பேரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அந்த 4 பேரும் விக்னேசை கடந்த மாதம் 9-ந் தேதி சீர்காழிக்கு வர சொல்லி உள்ளனர். அதன்பேரில் சீர்காழிக்கு வந்த விக்னேசை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் உப்பனாறு பாலம் அருகே அழைத்து சென்றுள்ளனர்.
4 பேர் கைது
பின்னர் அங்கிருந்த காட்டுப்பகுதியில் 4 பேரும் சேர்ந்து விக்னேசை தள்ளிவிட்டு தாக்கி கத்தியை காட்டி மிரட்டியும், மேலும் அவரிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதன் ரகசிய எண்ணையும் தெரிந்து கொண்டு அதில் இருந்த ரூ.70 ஆயிரம் பணத்தை எடுத்ததாகவும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பணத்தை பறிகொடுத்த விக்னேஷ் சீர்காழி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நேற்று கைது செய்து நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.