கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்
பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில் மகாசபை கூட்டம் பெருமாநல்லூரில் தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, மாவட்ட தலைவர் பழனிசாமி, பொருளாளர் பி.ஆர்.நடராஜன், நிர்வாகிகள் சேகர், இசாக், செல்வராஜ், செந்தில்குமார், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பனியன் தொழிலில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாள் வரை போனஸ் வழங்காமல் தொழிலாளர்களை வேதனைப்படுத்துகிறார்கள். பீஸ் ரேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்காது என்று திட்டமிட்டு ஏமாற்றி வருகிறார்கள். இது சட்டவிரோதமானது.
எனவே அனைவருக்கும் சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும். தீபாவளிக்கு 15 நாட்கள் முன்னதாகவே கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்குவதை தொழிற்சாலை ஆய்வாளர்கள், மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும். போனஸ் கிடைக்காவிட்டால் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அணுகலாம்.
ஜவுளி தொழில்களை பாதுகாக்க நூல் விலை உயர்வு குறித்தும், குறிப்பிட்ட காலம் வரை நூல் விலை உயராமல் பார்த்துக்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனியன் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலை ஆய்வாளர்கள், தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் வரும் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர் குறித்து உரிய கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பணிப்பாதுகாப்பு, ஊதிய உத்தரவாதம் கிடைக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க தலைவராக சுப்பராயன் எம்.பி., துணைத்தலைவராக ரவி, பொதுச்செயலாளராக சேகர், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக செல்வராஜ் மற்றும் 25 பேர் கொண்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.