சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
சிறுவாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு 19-6-2022 அன்று (நேற்று முன்தினம்) எழுதிய கடிதத்தில், சிறுவாணி குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி மற்றும் இத்திட்ட பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கவும், சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை 878.5 மீட்டர் வரை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இக்கோரிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பினராயி விஜயனுக்கு நன்றி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க, கேரள அரசு, சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவையை தீர்க்க போதிய நீரை 20-6-2022 அன்று (நேற்று) உடனடியாக திறந்துவிட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்ததற்காகவும், இரு மாநிலங்களுக்கிடையே ஆன ஒப்பந்தத்தின்படி, சிறுவாணி அணையில் இருந்து வேண்டிய நீரை வழங்கியமைக்காகவும் 20-6-2022 அன்று (நேற்று) கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, கேரளா அரசு சிறுவாணி அணையில் இருந்து போதிய நீரை திறந்து விட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, போதிய அளவு நீர் வழங்க இயலும்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இரு மாநிலங்களுக்கு இடையே ஆன ஒப்பந்தத்தின்படி வேண்டிய நீர் வழங்கிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.