தேனி-போடி சாலையில் அசுர வேகம், அலட்சியத்தால்அதிகரிக்கும் விபத்துகள்; பறிபோகும் உயிர்கள்:நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்


தேனி-போடி சாலையில் அசுர வேகம், அலட்சியத்தால்அதிகரிக்கும் விபத்துகள்; பறிபோகும் உயிர்கள்:நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி-போடி சாலையில் அசுர வேகம் மற்றும் அலட்சியத்தால் வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன. மனித உயிர்கள் பறிபோகின்றன. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

விலைமதிப்பற்ற மனித உயிர்கள் விபத்தில் பறிபோவது என்பது துயரமானது. விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு அது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. விபத்தில் கை, கால் என உடல் உறுப்புகளை இழப்பவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் வேதனை தரக்கூடியது.

சாலை விபத்துகள்

விபத்துகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. வாகன ஓட்டியின் அலட்சியம், அசுர வேகம் அவற்றுக்கு முக்கிய காரணம். செல்போன் பேசிக் கொண்டோ, மது போதையிலோ வாகனம் ஓட்டுவது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனாலும், சட்டத்தை மீறியும், போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமலும் செல்பவர்கள் விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். அல்லது விபத்துகளில் சிக்கி உயிரை இழக்கிறார்கள். அதுபோன்ற துயரங்கள் ஒருபுறம் என்றால், சாலைகள் சரியாக பராமரிக்கப்படாததால் ஏற்படும் விபத்துகள் என்பது அரசு துறைகளின் அலட்சியத்தால் நேர்கிறது.

அபாயமான பகுதிகள்

தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டவர்களின் உயிர் சாலை விபத்துகளில் பறிபோகின்றன. இதனால் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் பல வகைகளில் மேற்கொள்கின்றனர். இருந்தாலும் சில இடங்கள் அதிக விபத்து அபாயம் நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் தேவையான விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தேனி-போடி சாலையில் விபத்துகள் அதிக அளவில் நடந்து வருகின்றன. குறிப்பாக தேனி அருகே போடி விலக்கில் இருந்து கோடாங்கிபட்டி அருகே தோப்புப்பட்டி வரையிலான பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. இது தேசிய நெடுஞ்சாலையாக திகழ்கிறது. ஆர்.எம்.டி.சி. நகர் பகுதியில் தேனி-போடி சாலையும், திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கிறது. அவ்வாறு சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இரு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால் அங்கு மேம்பாலம் அல்லது பெரிய அளவிலான ரவுண்டானா அமைத்திருந்தால் விபத்து அபாயத்தை தவிர்த்து இருக்கலாம்.

தொடரும் விபத்துகள்

அடுத்ததாக கோடாங்கிபட்டி அருகே ஒத்தவீடு, தீர்த்தத்தொட்டி கோவில் அருகில், தோப்புப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சாலை வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கடந்த 12-ந்தேதி தோப்புப்பட்டி பகுதியில் அரசு ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் போடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானதிருப்பதி படுகாயம் அடைந்தார். அவருடைய ஜீப் டிரைவர் முகமது ஷெரீப் சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த ஞானதிருப்பதி சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவருடைய குடும்பத்தினர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதே பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி ஸ்கூட்டர் மீது பஸ் மோதிய விபத்தில், பாட்டி, பேத்தி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். அதே ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலியானார்.

தனிக்கவனம் இல்லை

இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை நிகழ்ந்த 10 விபத்துகளில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதுதவிர சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. அதுபோன்ற சிறு விபத்துகளில் லேசான காயம் அடைந்தவர்கள் போலீசாரிடம் புகார் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளிலும் இதே சாலையில் ஏராளமான கோர விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் குழந்தைகள் உள்பட பலர் பலியாகி இருக்கின்றனர். தொடர்ச்சியாக விபத்துகள் நடந்து வந்த போதிலும் இப்பகுதிகளில் போதிய விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த இடங்களில் சில மாத காலத்துக்கு நினைவு சின்னங்கள் போன்று பேரிகார்டுகளை (வேகத்தடுப்பு) வைப்பது வழக்கமாக இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்து தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்தப்படுவது இல்லை என்பதும் வாகன ஓட்டிகளின் மனக்குமுறலாக இருக்கிறது.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

அசுர வேகம்

தோப்புப்பட்டியில் இளநீர் வியாபாரம் செய்யும் முருகன் கூறும்போது, 'இதே சாலையில் உள்ள துரைச்சாமிபுரம் காலனி தான் எனது ஊர். அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. தற்போது அங்கு சாலையில் மையத் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு விபத்துகள் குறைந்துள்ளன. அதுபோல், போடி விலக்கு வரை மையத் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். தோப்புப்பட்டி பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சில விபத்துகளை நேரில் பார்த்துள்ளேன். வாகன ஓட்டிகளும் அசுர வேகத்தில் செல்கிறார்கள். வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். விபத்துகளை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றார்.

கோடாங்கிபட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ராஜேஷ் கூறும்போது, 'வாகனங்களின் அசுர வேகம் தான் இந்த சாலையில் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு தேனி மற்றும் போடியில் இருந்து புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்து, கூடுதல் பயண நேரம் நிர்ணயிக்க வேண்டும். நேரம் குறைவாக இருப்பதால் வேகத்தை அதிகப்படுத்துகின்றனர். வளைவான பகுதிகளில் தான் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கோடாங்கிபட்டி அருகில் தனியார் கற்குவாரிக்கு செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

தடுப்பு நடவடிக்கை

போடியை சேர்ந்த கார் டிரைவர் கோகுல்பிரகாஷ் கூறும்போது, 'தோப்புப்பட்டியில் அடுத்தடுத்து இரண்டு வளைவுகள் உள்ளன. இதனால் வளைவுகளில் முந்திச் செல்ல முயற்சிக்கும் வாகன ஓட்டிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. இங்கு மையத் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு சாலையின் அகலம் குறைவாக உள்ளது. சாலையை அகலப்படுத்திவிட்டு மையத் தடுப்புச்சுவர் கட்டலாம். அல்லது வளைவு இல்லாமல் சாலையை நேராக அமைக்க முயற்சி செய்யலாம்.

இருபுறமும் விவசாய நிலங்கள் என்பதால் நிலத்தை பெற்று சாலையை நேராக அமைத்தால் எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வகையில் சிக்னல் கம்பங்கள் அமைக்கலாம். அதுபோல், ஆர்.எம்.டி.சி. நகரில் 4 சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அல்லது அகலமான ரவுண்டானா அமைக்க வேண்டும்.' என்றார்.


Related Tags :
Next Story