எய்ட்ஸ் குறியீடு வடிவில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நேற்று காலை உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 சார்பில் சந்திரகாவி பள்ளி மற்றும் சிக்கண்ணா அரசு கல்லூரியின் வெளி வளாகம் ஆகிய பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், பொதுமக்களுக்கு எய்ட்ஸ் குறியீடு ரிப்பன் அணிவிக்கப்பட்டது. மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக கல்லூரி உள் விளையாட்டு அரங்கம் அருகே கல்லூரி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் குறியீடு வடிவில் அமர்ந்தும், தேசிய கொடி ஏந்தியும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி சார்பில் நடந்த பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூரணிஆஷா பேசும்போது, எய்ட்ஸ் ஒரு தொற்று நோய் கிடையாது. இந்த நோய் பாதித்தவரை தொடுவதாலோ, அவர்கள் பயன்படுத்திய பொருளை பயன்படுத்துவதாலோ பிறருக்கு நோய் பரவாது. எனவே, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும். மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் மனதளவில் பாதிக்கப்படாமல் அவர்களை நாம் தன்னம்பிக்கையூட்டி, அரவணைத்து செல்ல வேண்டும். இதன் மூலம் அவர்களின் ஆயுள் காலம் அதிகரிக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.