பொதுப்பணித்துறையால் கட்டப்படவுள்ள அரசு கட்டிடங்களின் முகப்புத்தோற்ற வரைபடம்
பொதுப்பணித்துறையால் கட்டப்படவுள்ள அரசு கட்டிடங்களின் முகப்புத்தோற்ற வரைபடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக்கட்டிடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டிடங்களின் முகப்புத்தோற்றத்தின் வரைபடத்தை வெளியிட்டார்.
அரசின் சிறப்பான பல்வேறு திட்டங்களின் பயன்கள் பலதரப்பட்ட மக்களையும், மாணவர்களையும் சென்றடையும் வகையில் பொதுப்பணித்துறை தரமான பல கட்டுமானங்களை உருவாக்கி வருகிறது. அக்கட்டிடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து தற்போதைய தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்து, நவீன முகப்புத்தோற்றத்துடன் பொதுவான கட்டமைப்பாக பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தோற்றம்
அதன்படி, அரசு பள்ளிக்கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பொதுப்பணித்துறையால் கட்டப்படவுள்ள அரசு கட்டிடங்களின் முகப்புத்தோற்ற வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.