சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று டீன் மணி தெரிவித்துள்ளார்.
கொரோனா அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவர்களுடன் உடன் வரும் உறவினர்கள் முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முதல் உள் நோயாளிகள், புறநோயாளிகள் மட்டுமின்றி பணியில் இருந்த டாக்டர்களும், செவிலியர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். மேலும், மருத்துவமனைக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவ்வாறு அணியாவிட்டால் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
முககவசம் கட்டாயம்
இதேபோல் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சேலத்தில் தற்போது 7 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சையில் உள்ளார். ஏற்கனவே நாம் கடைபிடித்த கொரோனா வழிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். யாரும் பயப்பட தேவையில்லை. மேலும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என்றார்.