கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு ஆஸ்பத்திரிகள், சினிமா தியேட்டர்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், பொது இடங்களில் செல்லும் பொது மக்களும் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் அலட்சியத்துடன் உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. 5-க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று பரிசோதனை முடிவு வெளியான நிலையில், 6 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, புதிதாக 6 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
31 பேருக்கு சிகிச்சை
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 84 ஆக உயர்ந்தது. இது வரை 75 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று வரை கொரோனா பாதித்த 31 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக கவசம் கட்டாயம்
இது பற்றி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா கூறுகையில், கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில், பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியில் சென்று வருபவர்கள் கட்டாயம் சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி இ்ருந்தால், அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலோ அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.