துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள் - அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மீண்டும் தொற்றிய பரபரப்பு... குவியும் தலைவர்கள், அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 8 மணி நேர விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி அதிகாலை சைதாப்பேட்டை இல்லத்துக்கு திரும்பினார்.
இன்று அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வருகை தந்தனர்.அங்கு சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
அமைச்சர் பொன்முடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதல்-அமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலுடனும்,சட்டரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டும்.மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் கழகம் துணை நிற்கும் என அமைச்சர் பொன்முடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.