அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்களைவிவசாயிகள் 'உழவன் செயலி' மூலம் அறிந்து கொள்ள வசதி-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்


அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்களைவிவசாயிகள் உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ள வசதி-கலெக்டர் கார்த்திகேயன் தகவல்
x

நெல்லையில் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்களை விவசாயிகள் உழவன் செயலியில் எளிதில் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு ள்ளது.

திருநெல்வேலி

நெல்லையில் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்களை விவசாயிகள் உழவன் செயலியில் எளிதில் அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு ள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-

அறுவடை எந்திரங்கள்

விவசாயிகள் தங்கள் நெற்பயிர் சரியான காலத்தில் அறுவடை செய்வதற்கு போதுமான வேலையாட்கள் இல்லாத போது, குறித்த நேரத்தில் அறுவடை செய்ய ஒருங்கிணைந்த அறுவடை எந்திரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அதே நேரத்தில் அறுவடை காலங்களில் அறுவடை எந்திரங்களின் வாடகைகள் அதிகரிப்பதோடு அவைகளை பெறுவதற்கு இடைத்தரகர்களை அணுக வேண்டியும், வாடகையோடு தரகு கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இதனை தவிர்க்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

50 எந்திரங்கள்

நெல்லை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 17 டயர் வகை எந்திரங்கள் மற்றும் 33 செயின் வகை எந்திரங்கள் என மொத்தம் 50 எந்திரங்களின் உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான எந்திரங்களை உழவன் செயலி மூலம் தெரிந்து கொண்டு நேரடியாக உரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம். இதனால் இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் பணம் மிச்சமாகும். இந்த எந்திரங்களை வாடகை அடிப்படையில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story