நாட்டுப்புற கலைஞர்கள் ஆன்லைனில் நலவாரிய அட்டை பெற வசதி-வாகை சந்திரசேகர் தகவல்
நாட்டுப்புற கலைஞர்கள் ஆன்லைனில் நலவாரிய அட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளதாக வாகை சந்திரசேகர் கூறினார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். இதில் கிராமப்புற கலைகளான தப்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், பரத நாட்டியம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
முன்னதாக வாகை சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டுப்புற கலைஞர்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் ரூ.3 கோடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏழை கலைஞர்களுக்கு நிதி உதவி பென்சன் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது பெற்ற நலிந்த கலைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படுகிறது. நாட்டுப்புற கலைஞர்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்க ரூ.10 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 50 ஆயிரம் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் மூலம் அரசின் திட்டங்களை பெற்றுள்ளனர். சுமார் 6 லட்சம் நாட்டுப்புற கலைஞர்கள் இருப்பார்கள். அவர்கள் நலவாரிய அட்டையை பெற்றால் தான் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கும். அதனால் நல வாரிய அட்டையை பெறுவதை எளிமைப்படுத்தும் வகையில் இ-சேவை மையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புற கலைகள் சுமார் 100 வகையில் உள்ளது. இதில் சில கலைகள் நலிந்து காணாமல் போய்விட்டன. அவற்றை மீட்டெடுக்கவும், அந்த கலையையும், கலைஞர்களையும் பாதுகாக்க திட்டங்களை இந்த அரசு செய்துவருகிறது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த கலைகளுக்குள் புதியதாக புகுத்துவது அதனை பலி கொடுப்பதாகிவிடும். அதனால் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆபாச நடனங்களை தவிர்க்க கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க மாவட்ட நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.