வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி:கலெக்டர் தகவல்


வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

வருவாய்த்துறை சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி

பொதுசேவை மையங்கள்

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள 230 பொதுசேவை, இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம், பட்டா மாறுதல், சமூக நலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

23 வகை சான்றிதழ்கள்

அதன்படி விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம்.

இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் நகல்களை பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்கள் பெறவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியம், கணவரால் கைவிடப்பட்டோர் ஓய்வூதியம், திருமணமாகாத முதிர்கன்னி ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வூதியம் பெறுவதற்கும் இனிமேல் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பம்

இத்தகைய சான்றிதழ்களை பெறுவதற்கு https://www.tnesevai.tn.gov.in/Citizen என்ற இணையதள முகவரியிலும், பட்டா மாறுதல் தொடர்பாக https://tamilnilam.tn.gov.in/Citizen என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சேவை கட்டணத்தை இணையதள வங்கி முறை அல்லது கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு மூலமாக செலுத்தலாம்.

பொதுமக்கள் சான்றிதழ்களை பெற அரசுக்கு விண்ணப்பிக்க உருவாக்கப்பட்டுள்ள பயனாளர் நுழைவு வசதியை தனியார் கணினி மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் வியாபார நோக்கில் பயன்படுத்தக்கூடாது. மீறினால் வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story