கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டாா்.
பவானி
பவானி பழனியாண்டவர் கோவில் அருகே கடந்த 2017-ம் ஆண்டு பவானி தேவபுரம் நந்தனார் வீதியை சேர்ந்த வெங்கடராமன் என்பவரின் மகன் ஜீவா (வயது 40) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பவானியை சேர்ந்த துரைராஜ் (22), அதே பகுதியை சேர்ந்த பிரபு (25) ஆகிய 2 பேரையும் பவானி போலீசார் கைது செய்தார்கள். இது தொடர்பான வழக்கு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே துரைராஜ் மற்றும் பிரபு இருவரும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். சில நாட்களில் பிரபு இறந்துவிட்டார். அதன்பின்னர் துரைராஜ் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் கடந்த 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை பவானி போலீசார் வலைவீசி தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் துரைராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பவானி போலீசார் பெங்களூரு விரைந்து சென்று துரைராஜை கைது செய்தார்கள். பின்னர் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.