கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கேட்ட வழக்கில் பதில் அளிக்கவில்லை: மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் -ஐகோர்ட்டு உத்தரவு


கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கேட்ட வழக்கில் பதில் அளிக்கவில்லை:  மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் -ஐகோர்ட்டு உத்தரவு
x

கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கேட்ட வழக்கில் பதில் அளிக்காததால் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு கேட்ட வழக்கில் பதில் அளிக்காததால் மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இழப்பீடு

மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தினர்.

இதற்காக உரிய இழப்பீடு அல்லது நிலமோ வழங்கும் படி அதிகாரிகளிடம் முறையிட்டேன். பல ஆண்டுகளாக எந்த பதிலும் சொல்லாமல் இழுத்து அடித்தனர். எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டுத் தொகையை உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.

தீர்வு காண இயலவில்லை

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். அப்போதே இந்த வழக்கு குறித்து மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா..? என்று எந்த தகவலையும் தெரிவிக்காததால், இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.

அபராதம்

மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொதுநிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story