இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவர் கைது
விளாத்திகுளத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை போலீசார் கைதுசெய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து சென்ற இளம்பெண்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மகன் ராபின்சன். சித்த மருத்துவர். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.
விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணின் ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே இளம்பெண் தன்னுடைய மகனை சிகிச்சைக்காக ராபின்சனின் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
பாலியல் தொல்லை
அப்போது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று பாவனை செய்த ராபின்சன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டார்.
இதையடுத்து அங்கு நடந்ததை வெளியில் கூறினால் ஊசி போட்டு கொலை செய்து விடுவதாக ராபின்சன் இளம்பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது.
கைது
இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ), 506 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ராபின்சனை கைது செய்தனர். பின்னர் அவரை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே ராபின்சன் சித்த மருத்துவம் படித்து விட்டு, நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக கடந்த 2015-ம் ஆண்டு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியை நடத்தி வந்ததுடன் நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். விளாத்திகுளத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.