போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி பெண் குறித்து தவறான தகவல் பரப்பியவர் கைது


போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி பெண் குறித்து தவறான தகவல் பரப்பியவர் கைது
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போலி இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி பெண் குறித்து தவறான தகவல் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்கான தேர்விற்காக வீட்டில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2-2-2022 முதல் அவருக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போன் அழைப்புகள் வந்ததாகவும், அதில் பேசிய நபர்கள் அவரிடம் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு பேசிய ஒரு நபரின் மூலம், அவருடைய செல்போன் எண் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான கணக்கு மூலமாக பலருக்கும் பகிரப்பட்டுள்ளது என்ற தகவல் அவருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கூடுதல் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) செண்பக பிரியா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி அந்த பெண்ணை பற்றி தவறாக தகவல் பரப்பியவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 23) என்பதும், அவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் செங்கல்பட்டு சென்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story