போலி பாஸ்போர்ட், விசா வழக்கு: தலைமறைவாக இருந்த 'டிராவல்ஸ் ஏஜெண்ட்' கைது


போலி பாஸ்போர்ட், விசா வழக்கு: தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் ஏஜெண்ட் கைது
x

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டார். அவர், போலியாக 150 பாஸ்போர்ட், விசா தயாரித்து கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் உதவி இயக்குனர் கடந்த மாதம் 19-ந்தேதி அன்று மத்திய குற்றப்பிரிவு சீட்டு, கந்துவட்டி மற்றும் போலி பாஸ்போர்ட் ஒழிப்பு பிரிவில் புகார் மனு அளித்தார். அதில், 'சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் (வயது 54) என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து வருவதாகவும், அதற்கான உபகரணங்கள் அவரிடம் இருப்பதாகவும்' கூறியிருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகமது ஷேக் இலியாசை கடந்த மாதம் 20-ந்தேதி அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்தனர். அப்போது தெலுங்கானா மாநிலம் ஜதராபாத்தை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜெண்ட் அகமது அலிகான் (42) தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் அவர் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து தலைமறைவானார். இந்த நிலையில் தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த அகமது அலிகானை அதிரடியாக கைது செய்தனர்.

150 போலி பாஸ்போர்ட்

விசாரணையில் இவர், மும்பை மற்றும் ஐதராபாத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருவதும், இதன் மூலம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்க சுமார் 150 போலி பாஸ்போர்ட்கள், விசா ஸ்டாம்பிங் செய்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர், அகமது அலிகான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏஜெண்டுகள் மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற விண்ணப்பிக்கும் மக்கள் உஷாராக இருக்க வேண்டும். மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக முறையான ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களை அணுகி விசாக்களை பெற வேண்டும் என்று போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story