வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி போலீஸ்காரர் கைது
மதுவிலக்கு போலீஸ்காரர் எனக்கூறி வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
பணம் கேட்டு மிரட்டல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகளுக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று வந்தார். தான் மதுவிலக்கு போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிவதாக வியாபாரிகளிடம் அறிமுகம் ஆனார்.
மேலும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்திருப்பதாகவும், இதனால் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்றும் வியாபாரிகளிடம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் சில கடைகளிலும் சோதனை நடத்தினார். ஆனால் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கைது
இருந்த போதிலும், அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதில் சந்தேகமடைந்த வியாபாரிகள், அவரிடம் போலீஸ்காரர் என்பதற்கான அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டனர். அவரும், தான் வைத்திருந்த அடையாள அட்டை ஒன்றை காண்பித்தார்.
இருப்பினும் அவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள், இதுதொடர்பாக நத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவை சேர்ந்த சரவணன் (வயது 36) என்று தெரியவந்தது. மேலும் அவர் போலீஸ் துறையில் பணிபுரியவில்லை. போலீஸ் போல நடித்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.