வடகாடு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி
வடகாடு பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
வடகாடு:
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, அனவயல், நெடுவாசல், கீரமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை விவசாயிகள் மூலமாக, தேங்காய் உற்பத்தி அதிக அளவில் நடந்து வந்தது. இப்பகுதிகளில் 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து போயின. மேலும் சிறு, குறு தென்னை விவசாயிகள் முதல் பெரும் விவசாயிகள் வரை இதன் இழப்பை ஈடு செய்ய முடியாது நிலை ஏற்பட்டது. ஒரு சில விவசாயிகள் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டெழுந்து வந்த விவசாயிகள் அரசு மற்றும் தனியார் நர்சரிகள் மூலமாக, தென்னை மரங்கள் இருந்த இடங்களில் இன்றளவும் தென்னங்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இவ்வாறு நடப்பட்ட தென்னங்கன்றுகளையும் தென்னையை தாக்கும் சிவப்பு கூன் வண்டு மற்றும் காண்டாமிருக வண்டுகளிடம் இருந்து காக்க விவசாயிகள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, தற்சமயம் இப்பகுதிகளில் தேங்காய் விலை வீழ்ச்சியாலும் விவசாயிகள் சொல்ல முடியாத வேதனையில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதிகளில் உரித்த தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு வாங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தேங்காய் உடைப்பு போராட்டங்கள் கூட ஆங்காங்கே நடத்தப்பட்டன. மேலும் பண்டிகை நாட்களில் கூட தேங்காய் விலை உயர்வு பெறாமல் தேங்காய் ஒன்று ரூ.9 மற்றும் ரூ.10 என்ற விலைகளிலேயே வியாபாரிகள் வாங்கி செல்வதாகவும் விவசாயிகள் வருத்தமுடன் கூறி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேங்காய்களுக்கு உரிய விலை இன்றி இருப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி இன்றி இருந்து வருகின்றனர்.