பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி
நீலகிரியில் பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரியில் பூண்டு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
பூண்டு சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெள்ளை பூண்டு, நடப்பு மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள 4 மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வழக்கத்தை விட வெள்ளை பூண்டு வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பூண்டு விலை வீழ்ச்சியடைந்து உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வடமாநில விவசாயிகள்
மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பூண்டு சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இதனால் தரமான பூண்டு விதைகள் வாங்குவதற்காக அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்து பூண்டு வாங்கி செல்கின்றனர். இதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது. தற்போது, வடமாநில விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்பட்டதால், அவர்கள் இங்கு வரவில்லை. இதனால் பூண்டு தேக்கமடைந்ததால், கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் பூண்டு கொள்முதல் விலை ரூ.100 ஆக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் மொத்த வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டாததால், சில விவசாயிகள் பூண்டை அறுவடை செய்து இருப்பு வைத்து உள்ளனர். பூண்டு சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு அதிக செலவாகும் நிலையில், தற்போது விலை குறைந்து இருப்பது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.