பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
தர்மபுரியில் பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரியில் பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பூக்கள் சாகுபடி
தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த பூக்கள் அனைத்தும் தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் தினசரி நடைபெறும் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை குறைந்தது. தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியதால், சனிக்கிழமை விரதம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும். பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
விவசாயிகள் கவலை
ஆனால் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை நாளாக இருந்தும் பூக்கள் விற்பனை மந்தமாக நடைபெற்றது. கடந்த வாரங்களை போலவே பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தர்மபுரி பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சன்ன மல்லி ரூ.280-க்கும், அரளி ரூ.120-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ.80-க்கும், தாமரை ஒரு மொட்டு ரூ.20-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.30-க்கும், சாமந்தி பூ ரூ.60-க்கும் விற்பனையானது.
பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அடுத்த வாரம் இரண்டாவது சனிக்கிழமை சற்று பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.