குடும்பநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
தமிழகத்தில் குடும்ப நலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ பேசினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், அலுவலா்கள் எடுத்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பேசுகையில்,
குடும்ப நலத்திட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. தமிழகத்தில் குடும்பநலத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் முதன்மையானதாக உள்ளது.
சிறு குடும்பநெறி, திருமணத்திற்கேற்ற வயது முதல் குழந்தை தாமதப்படுத்த வேண்டிய குடும்ப நலமுறைகள் ஆகியவைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்
ஒருபெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் சாதகமான சூழ்நிலை உருவாக்கவேண்டும். தாய், சேய் நலத்தை பாதுகாக்கவும், பெண் கல்வியினை மேலும் ஊக்குவிக்கவும் வேண்டும். குடும்ப நலத்திட்டங்களை மக்கள் இயக்கமாக மலர செய்ய விழிப்புணர்வு பணிகளில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து உலகமக்கள் தொகை தினம் 2023-யை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
பின்னர் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் 120 பேர் பங்கேற்ற உலகமக்கள் தொகை விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வரை சென்றது.
இதில் மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், இணை இயக்குனர் (நலப்பணிகள்) செல்வகுமார், துணை இயக்குனர் (குடும்பநலம்) உமா, மக்கள் கல்விதொடர்பு அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, துணை இயக்குனரின் நேர்முகஉதவியாளர் (சுகாதாரப்பணிகள்) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவகல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.