பிரபல நடிகர்-டைரக்டர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்


பிரபல நடிகர்-டைரக்டர் மாரிமுத்து மாரடைப்பால் மரணம்
x

பிரபல குணச்சித்திர நடிகரும், டைரக்டருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56.

சென்னை,

கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பிரபல டைரக்டர் மற்றும் நடிகராக மாறியவர் மாரிமுத்து. இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தான் நடித்து வரும் 'எதிர்நீச்சல்' டி.வி. தொடருக்காக சென்னை வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது மாரிமுத்துவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாரிமுத்து உயிர் பிரிந்தது. மாரிமுத்துவின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இறுதிச்சடங்கு

பின்னர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருச நாடு பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று (சனிக்கிழமை) இறுதி சடங்குகள் நடக்கின்றன.

மாரிமுத்து டைரக்டர் வசந்த் இயக்கிய 'ஆசை' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து சினிமா வாழ்க்கையை தொடங்கினார். 'கண்ணும் கண்ணும்', 'புலிவால்' போன்ற படங்களை டைரக்டு செய்துள்ளார்.

'வாலி', 'உதயா', 'நிமிர்ந்து நில்', 'பைரவா', 'மதுரை வீரன்', ஆரோகணம் கொம்பன், திருநாள், கொடி, எமன், சண்டக்கோழி, மிஸ்டர் லோக்கல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 'பரியேறும் பெருமாள்' படத்தில் நாயகிக்கு தந்தையாக வந்த இவரது நடிப்பு பெரிதும் கவனம் பெற்றது.

கமல்ஹாசனின் 'விக்ரம்', ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படங்களிலும் மாரிமுத்துவின் நடிப்பு பேசப்பட்டது.

'ஏம்மா... ஏய்...' வசனம்

சினிமா தவிர்த்து சின்னத்திரையிலும் பிரபலமானார். 'எதிர்நீச்சல்' டி.வி. தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டார்.

இந்த தொடரில் 'ஏம்மா... ஏய்...' என்ற வசனம் இவரது டிரேட் மார்க் வசனமாகவே மாறத் தொடங்கியது. நக்கலும், நையாண்டியுமாக மாரிமுத்து பேசிய வசனங்கள் மீம்ஸ்களாகவும் வந்தன.

இவரது சிறந்த நடிப்புக்காகவே அந்தத் தொடர் பெரும்பாலான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

மரணம் அடைந்த மாரிமுத்துவுக்கு, பாக்கியலட்சுமி என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாரிமுத்து அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி'' என்று கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மாரிமுத்துவின் மரணச்செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன். என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன்' என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இயக்குனர் ஆனவர் மாரிமுத்து. 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்பு திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராக புகழ்பெற்றார்.

மேலும், பல நேர்காணல்களிலும், நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ் திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story