அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சி கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு
கடலூர் மத்திய சிறையில் அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் முதுநகர்,
விசாரணை கைதி
கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 900-க்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான தனசேகர் என்கிற எண்ணூர் தனசேகர்(வயது 42) விசாரணை கைதியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணை தொடர்பாக எண்ணூர் தனசேகரை சென்னை பூந்தமல்லி 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சென்னைக்கு அழைத்து செல்லாமல், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
தற்கொலை முயற்சி
இந்நிலையில் ரவுடி எண்ணூர் தனசேகர், தன்னிடம் இருந்த ரத்த கொதிப்பு மாத்திரைகளை அதிக அளவு தின்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இது பற்றி அவர் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள், எண்ணூர் தனசேகரை சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நேற்று சிறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடி எண்ணூர் தனசேகர், கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று, அதிக அளவு ரத்த கொதிப்பு மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.